கனவு….காதல்….கொஞ்சம் கடமை! – 1

1

மாலையும் இரவும் சந்திக்கும் அந்திப் பொழுதைப் போல, இளமையும் முதுமையும் சந்திக்கும் நடுவயதில் நிற்பவன் நான்.

எனக்கு முன்னால் ஒரு தலைமுறையும், பின்னால் ஒரு தலைமுறையும் துல்லியமாய் என் கண்களுக்குத் தெரிகின்றன.

என் மூத்த தலைமுறையிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகளும் உண்டு; மாற்றிக் கொண்டவைகளும் உண்டு. என் இளைய தலைமுறைக்கு நான் கற்பிக்க வேண்டியவைகளும் உண்டு; அவர்களிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டியவைகளும் உண்டு.

அவர்களின் ‘இன்று’ என் ‘நேற்றை’ப்போல் இல்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இப்போது ‘மிக மிக விரைந்து’ மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் நாம் குறித்துக்கொள்ள வேண்டிய செய்தி.
முன்பு 50, 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம், இப்போது 5, 10 ஆண்டுகளிலேயே ஏற்பட்டுவிடுகிறது. நழுவி விழுந்த தன் மேலாடையை அரசன் திரும்பிப் பார்ப்பதற்குள், அவன் ரதம் பல மைல்களை கடந்துவிட்டது என்று இலக்கியம் சொல்வதைப்போல, இன்றைய உலகம் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறது.
என் 15, 16 ஆவது வயதில் நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் அப்படியே நினைவில் உள்ளது. தேனி, கம்பம் பகுதியைத் தாண்டிப் பெரியாறு அணையிலிருந்து, இறந்துபோன என் அக்கா இந்திராவிடமிருந்து வந்த ஒரு தொலைபேசி அன்று மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அஞ்சலகத்திலிருந்து ஒருவர் வீட்டுக்கு வந்து, பெரியாறிலிருந்து ‘டிரங்க் கால்’ வந்துள்ளதாகச் சொன்ன அந்த நிமிடம், என் அம்மா பதறிப்போனார். தந்தியை விட அவசரம் என்றால்தான், அப்போது வெளியூர்த் தொலைபேசி.

அப்பா ஊரில் இல்லை. என்னை அழைத்துக்கொண்டு அம்மா அஞ்சலகத்திற்கு ஓடினார். அங்கே சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. ‘மதுரைக்கு லைன் கிடைச்சுருச்சு. அங்கேயிருந்து கம்பத்துக்குக் கிடைக்கலை. கம்பமும் கிடைச்சாச்சு. கூடலூர் கிடைக்கலை’ என்று அஞ்சலக அலுவலர் சொல்லிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், ‘ஏதோ, என்ன

வோ’ என்று எண்ணி என் அம்மா அழுது கொண்டிருந்தார். கடைசியில் அது ஏதோ ஒரு நல்ல செய்தியாகத்தான் இருந்தது என்று நினைவு.

இப்போது உலகின் எந்த மூலையில் இருக்கும் மனிதரோடும், சில நொடிகளில் நம்மால் தொடர்பு கொள்ள முடிகிறது. ஓர் ஊரில் சில செல்வந்தர்களின் வீடுகளில் மட்டுமே தொலைபேசி இருந்த நிலை மாறி, இன்று நம் வீடுகளில் எந்தத் தொலைபேசி அடிக்கிறது என்ற தடுமாற்றம்தான் நம்முடைய குழப்பமாக உள்ளது.

உலகைப் போலவே, நம் தமிழகமும், இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அம்மாற்றத்திற்கு அடிப்படையாக மூன்று புதிய வரவுகளை நம்மால் அடையாளம் காணமுடியும்.

1976 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு அறிமுகமான அரசுத் தொலைக்காட்சியும், அதன் விரிவாக 1990களில் தொடங்கிய தனியார் தொலைக்காட்சிகளும் முதல் காரணம்.

1980களின் நடுவில் தொடங்கி, 1990 முதல் சூடு பிடித்த கணிப்பொறிகள் இரண்டாவது காரணம்.

2002லி03இல் எல்லோருடைய கைகளுக்கும் வந்து சேர்ந்த கைத்தொலைபேசிகள் (செல்போன்) மூன்றாவது காரணம்.

மூன்று காரணங்களும் சேர்ந்து, இளைய தலைமுறையின் முகத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டன.

இவை அறிவியல் வளர்ச்சி, வாழ்வியல் முன்னேற்றம். வாழ்க்கைச் சுழல் ஏணியை நம்மால் மறுதலிக்க முடியாது. மறுதலிக்கவும் கூடாது. வரலாற்றுப் புதுமைகளை மறுத்துவிட்டு, மரபு, பண்பாடு ஆகியவற்றின் பெயரால் மறுபடியும் குகைக்குத் திரும்பச் சொல்லும் பழைமைவாதிகளை உலகம் ஒருநாளும் ஏற்றுக்கொள்வதில்லை.

அதே நேரத்தில், மரபையும், பண்பாட்டையும் எல்லாப் புதுமைகளுக்கும் எதிரானவை என்றும் கருத வேண்டியதில்லை.

கலை, இலக்கியங்களிலும் காலத்தை வென்று நிற்பவை ஏராளம். அவற்றையெல்லாம் புதுமை என்ற பெயரில் புறக்கணித்து விடக் கூடாது.

இன்றைய இளைஞர்கள் கணிப்பொறியியலில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வல்லரசு நாடுகள்கூட, இந்தத் துறையில் தமிழக இளைஞர்களைத் தாங்கிப் பிடிக்கின்றன. இந்நிலை நமக்கு மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறது.

ஆனால் அதே இளைஞர்கள், தாம் பிறந்த மண்ணின் வரலாற்றையும், சமூகநீதிப் போராட்டங்களையும், இலக்கியச் செல்வங்களையும் அறியாமல் நிற்பது வேதனைக்குரியதல்லவா?

சங்ககால இலக்கியங்களை அல்ல, இன்று வெளிவரும் கவிதைகள், நாவல்களைக் கூட எத்தனை இளைஞர்கள் படிக்கின்றனர்? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகம் பற்றியன்று, இன்றைய சமூகச் சூழலைக் கூட எத்தனை இளைஞர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுக்கின்றனர்? ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம், சேதுக் கால்வாய்த் திட்டம், சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, அணுசக்தி உடன்பாடு போன்ற நடப்புச் செய்திகளின் விவரங்களைத் தம் விரல் நுனிகளில் வைத்திருக்கும் இளைஞர்கள் எத்தனை பேர்?

அத்தகைய இளைஞர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே என்பதனை நாம் அறிவோம். என்ன காரணம்?

இளைஞர்களிடம் கேட்டால் இரண்டு விடைகள் வருகின்றன. எல்லாவற்றையும் படித்து அறிய நேரமில்லை என்பது ஒன்று. இவைகளையெல்லாம் தெரிந்துகொள்வதால் என்ன பயன், இன்றைய வாழ்க்கைக்கு எதுவும் உதவாது என்பது இன்னொன்று.

இரண்டு விடைகளுமே மேலோட்டமானவை. நம்மைச் சுற்றி நிகழும் வாழ்க்கைப் போக்குகளில் அக்கறை காட்டமால், நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருக்கும் அலட்சியத் தன்மைதான் அடிப்படைக் காரணம். அரசியல்வாதிகளின் மீது பொதுவாகவே மக்கள் மூளைகளில் படர்ந்து கிடக்கும் வெறுப்பு இன்னொரு காரணம்.

அமெரிக்காவின் பில்கேட்ஸும், அம்பானியும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று கருதும் இளைஞர்கள், கருணாநிதி பற்றியோ, ஜெயலலிதா பற்றியோ அப்படிக் கருதுவதில்லை. ஏதோ கட்சி நடத்தி, மேடையில் பேசி வயிற்றுப் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றே எண்ணுகின்றனர்.

தான் ஒரு கட்சிக்கு ஆதரவாளன் என்பதெல்லாம் தரக்குறைவானது என்றும், படிப்பாளிகளுக்கு அது உரிய இடம் இல்லை என்றும் நினைக்கின்றனர்.

இப்படி அரசியலற்ற, சமூக அக்கறையற்ற ஓர் அணியை உருவாக்கியிருப்பதில் ஊடகங்களுக்கும் கூட ஓர் இடம் உண்டு.

துடைத்தெறியப்பட வேண்டிய இந்தச் சிந்தனை குறித்து, என் அடுத்த தலைமுறையோடு உரையாட நான் ஆவல் கொண்டேன்.

உங்கள் கனவு, காதல், ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் எதிலும் நான் குறுக்கிடவில்லை. இளமைக்கேற்ற துள்ளல் என்பது எனக்கு ஏற்புடையதே. ஆனால், சமூகம் பற்றிய பார்வையும், அக்கறையும் நமக்குக் கொஞ்சமாவது வேண்டாமா? கனவுகளில் மிதந்து கடமைகளை மறப்பது நியாயம்தானா?

ஒரு மாலை நேரம், தேநீர்க் குவளையோடு அமர்ந்து, பலவற்றையும் பேசும் நண்பர்களைப்போல, என் இளைய தலைமுறையே உங்களோடு பேச விரும்புகிறேன். வருவீர்களா?

தொடரும்……..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: