ஈழப்போரில் இந்திய இராணுவம் – தமிழர் நெஞ்சில் தகிக்கும் நெருப்பு! – சுப. வீ

52245884

தமிழ்நாட்டில் எழுந்துள்ள தமிழீழ ஆதரவுப் பேரலை, தமிழக அரசியலிலும் சில முக்கியமான திருப்பங்களுக்கு வழி வகுத்துள்ளது.பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணமோ, 48 மணி நேரப் போர் நிறுத்தமோ தமிழீழ மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வரவில்லை. மாறாக, நாளுக்கு நாள் அங்கே நிலைமை மோசமாகிக் கொண்டுள்ளது.

பட்டினிப் போர், மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கண்டனப் பொதுக்கூட்டம், மாநாடு போன்ற அனைத்து விதமான எதிர்ப்புகளும் பயனற்றுப் போனபின், தமிழக இளைஞர்கள் சிலர் தங்களையே கொளுத்திக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். ‘இனிப் பொறுப்பதில்லை’ என்னும் நிலை எங்கும் பரவிக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழக மாணவர்களிடம், தமிழீழ ஆதரவு பெருகிக் கொண்டுள்ளது.

இளைஞர் முத்துக்குமாரின் தற்கொடைக்குப் பிறகு, ஈழ ஆதரவு மேலும் கூர்மையடைந்துள்ளது. ஆனால் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சட்டமன்றத்தில் சுதர்சனம், யசோதா ஆகியோர் பேசியுள்ள பேச்சு, காங்கிரசின் மீது கடுங்கோபத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஒரு பதற்றமான சூழலில் எப்படிப் பேச வேண்டும் என்னும் பக்குவம், 125 வயதாகிவிட்ட காங்கிரசுக் கட்சியின் தலைவர்களுக்குச் சிறிதும் இல்லாமல் போய்விட்டது.

1965 ஆம் ஆண்டு, தமிழக மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் காங்கிரசின் மீது எவ்வளவு கோபம் கொண்டிருந்தார்களோ, அதற்குச் சற்றும் குறையாத, சினமும் சீற்றமும் இன்று காணப்படுகிறது. 65 ஆம் ஆண்டிலாவது, இந்தி திணிக்கப்பட்டது ; அவ்வளவுதான். ஆனால் இன்றோ தமிழ் இனமே அழிக்கப்படுகின்றது.

அது அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும், அவ்வரசின் இறையாண்மையில் நாம் தலையிட முடியாது என்றும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது கேலிக்குரியதாகும். எப்போது ஒரு நாட்டிலிருந்து மக்கள் வெளியேறி, இன்னொரு நாட்டிற்குள் அகதிகளாக நுழைகின்றனரோ, அப்போதே அது உள்நாட்டுப் பிரச்சினை என்னும் நிலையைக் கடந்து, உலகப் பிரச்சினையாக ஆகிவிடுகிறது. அதே போல, நாட்டை ஆளும் அதிகார உரிமைதான் இறையாண்மையே அன்றி, சொந்த மக்களையே எறிகுண்டு வீசியும், பீரங்கிகளால் தாக்கியும் கொன்றழிப்பது இறையாண்மை ஆகாது.

இன்று அங்கே நடப்பது, தமிழின அழிப்புத்தானே தவிர, போர் அன்று.

இந்திய அரசு தலையிட்டுப் போரை நிறுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த விருப்பம். அந்த விருப்பத்தை இந்திய அரசு மயிரளவும் மதிக்கவில்லை. அங்கு கிரிக்கெட் போட்டிக்கு ஆள் அனுப்புகிறது. மேலும் இப்போது அங்கிருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகளைப் பார்க்கும் போது, பின்னாலிருந்து போரை நடத்துவதே இந்திய அரசும், ஆளும் காங்கிரஸ் கட்சியும்தான் என்று தோன்றுகிறது. உளவுக் கருவிகள், டேங்குகள், ராடார் போன்றவைகளைக் கொடுத்துச் சிறீலங்கா அரசுக்கு உதவியது மட்டுமின்றி, இராணுவ அதிகாரிகளையும் அனுப்பியிருப்பது எவ்வளவு பெரிய கொடுமை? அங்கே புலிகளின் தாக்குதலில் இறந்துபோன அதிகாரிகளில் சிலர் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நம் அத்தனை பேருக்கும் அவமானம் இல்லையா ?

இன்னொரு முகாமையான செய்தியையும் இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.இப்போது அங்கு கொல்லப்படுவது, ஈழ மக்கள் மட்டுமில்லை…அவர்களில் சரி பாதிப் பேர் இந்திய மக்கள். ஆம்… மலையக மக்களில் ஒரு பகுதியினரும் அங்குதான் உள்ளனர்.

பண்டா – சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பின் ஒரு பகுதி மலையக மக்களுக்கு இந்தியாவும், இன்னொரு பகுதி மக்களுக்குச் சிறீலங்காவும் குடியுரிமை வழங்கின. இந்தியக் குடியுரிமை பெற்ற மக்கள், தமிழ்நாட்டில் உதகை மாவட்டத்தில் கூடலூர், கோத்தகிரி, நடுவட்டம் போன்ற பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இலங்கைக் குடியுரிமை பெற்ற மலையக மக்கள், வவுனியா, கிளிநொச்சிப்பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இன்னும் பல லட்சக்கணக்கான மலையக மக்கள் நாடற்றவர்களாகவே உள்ளனர் என்பது ஒரு வேதனையான செய்தி.

ஆக, 40 ஆண்டுகளுக்கு முன் கிளிநொச்சிப் பகுதியில் குடியேற்றப்பட்ட, இந்திய வம்சா வழியினரான மலையக மக்கள்தாம் பெரும்பகுதியாக முல்லைத் தீவில் சரண் அடைந்துள்ளனர். அவர்களை அழித்தொழிக்க முயல்வதன் மூலம், இந்திய அரசு தன் சொந்த மக்களையே அழிக்கத் துணை போகிறது என்றுதான் பொருள். அங்கு தஞ்சம் புகுந்துள்ள ஈழ மக்களும், மிக ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள்தாம். ஓரளவு வசதியான மக்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்பே புலம் பெயர்ந்து சென்று விட்டனர். மீதமிருக்கும் ஏழை மக்களான ஈழ மக்களும், மலையக மக்களும்தான் பல்வேறு சித்திரவதைகளுக்கும், படுகொலை களுக்கும் இன்று ஆளாகி அல்லல்படுகின்றனர்.

அந்த இலட்சக்கணக்கான மக்களை புலிகள்தான் பிடித்து வைத்துள்ளனர், கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்பன போன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளைச் சிலர் கூறிவருகின்றனர். அதே ஆட்கள்தான், முல்லைத் தீவில் ஆயிரம் புலிகள் மட்டுமே உள்ளனர் என்றும் சொல்கின்றனர். இப்போது இரண்டு கேள்விகள் நம்மிடம் எழுகின்றன. என்னதான் ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றாலும், ஆயிரம் பேர், ஐந்து இலட்சம் மக்களைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியுமா ? அடுத்ததாக, எறிகணைத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் பகுதியில், மக்களை எப்படிக் கேடயங்களாகப் பயன்படுத்த முடியும் ? அங்கு என்ன கத்திச் சண்டையா நடைபெறுகிறது ?

எனவே, இப்படிப்பட்ட காரணங்களை எல்லாம் சொல்லிக்கொண்டு, போருக்குத் துணை போவதும், மறைமுகமாகப் போரை நடத்துவதும், காங்கிரசுக் கட்சியைப் படு பாதாளத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். காங்கிரசின் மீது மக்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏற்பட்டபின், அக்கட்சியைக் கூட்டணியாக வைத்துக் கொள்வது, ஈரப் பொதியைச் சுமப்பதாக ஆகிவிடும் என்னும் உண்மை, தலைவர் கலைஞருக்குப் புரியாமல் இருக்காது.

இன்றைக்கு எழுந்துள்ள தமிழீழ ஆதரவுச் சூழலை, எதிர்க்கட்சிகள் தி.மு.க.விற்கும், கலைஞருக்கும் எதிராகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. முத்துக்குமார் மரணம் கூட அரசியலாக்கப் படுகிறது என்பது உண்மைதான். அதனால்தான் அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அரசு கொடுக்கும் பணம் மறுக்கப்படுகிறது.

இந்நிலைக்கான ஒரே மாற்று, ஈழ ஆதரவை மேலும் வலிவாகத் தன் கையில் கலைஞர் எடுத்துக் கொள்வது மட்டுமே! அவர் முன்வந்து முழங்கிய பின்புதான், மனிதச் சங்கிலி மைல் கணக்கில் நீண்டது. ஐம்பது ஆண்டுகளாக அவர் ஈழ ஆதரவாளராகவே இருக்கிறார் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இப்போது மிக முக்கியமான ஒரு தருணத்தில் நாம் நின்று கொண்டுள்ளோம். ஆளுங்கட்சியாய் இருப்பதில் பல சங்கடங்கள் உண்டுதான். ஆனால் எல்லாவற்றையும் மீறி , ஈழ ஆதரவை அவர் வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. அப்படிச் செய்தால் வரலாறு என்றும் அவரைப் போற்றும்!

இல்லையேல், என் போன்ற கலைஞரின் ஆதரவாளர்களை வரலாறு தூற்றும்.

சுப. வீரபாண்டியன்

கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2009


7 Responses to ஈழப்போரில் இந்திய இராணுவம் – தமிழர் நெஞ்சில் தகிக்கும் நெருப்பு! – சுப. வீ

  1. JAYASANGAR says:

    VANAKAM. ULAGA TA,MIL ENAME ONDRU PATTU TAMIL EELa tamilanai kapatru. NAMABUNGAL TAMIL EELAM MALARUM. TAMIL NADU CONGRESS INNA UNRVAI KATUDA ILLAI NALAI SARITHIRAM UNNAI KARRI THUPUM.

    MALAYSAI TAMILAN

  2. porattamtn says:

    நாசூக்காகத்தான் இருக்கிறது…!

  3. சென்னைத்தமிழன் says:

    சிங்களத்தில் கடைசித்தமிழன் இருக்கும் வரை போராட்டம் தொடரும்.

    ‘தமிழன் என்றொரு இனமுண்டு,
    தனியே அவனுக்கொரு குனமுண்டு,
    அவன் – புறநானூற்று அணுகுண்டு என உலகம் சொல்லும் நாள் வரும்.

    ஒரு கோடி ஆண்டுகள் அடிமைப்பட்ட எம் தமிழ் விடுதலையாகும்,
    தமிழன் வாழாத நாடில்ல….
    தமிழனுக்கென ஒரு நாடில்லை எனும் நிலை மாறும்…
    தனி ஈழம் மலர்ந்தே தீரும்.

    தமிழைப்பழித்தோருக்கு சங்காரம் நிச மென சங்கே நீ முழங்கு….

    – சென்னைத்தமிழன்

  4. R Kanann says:

    விடுதலை நொடிப்பொழுதில் கிடைப்பது அல்ல.

    சென்னை தமிழன் சொன்னது போல
    (சிங்)களத்தில் கடைசி தமிழன் இருக்கும் வரை போரட்டம் தொடரும்.

  5. Rathi says:

    ஈழப்போரில் இந்தியாவின் போக்கையும் தமிழ்நாட்டின் உள்ளக்கிடக்கையையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். காங்கிரஸ்‍‍‍_ இந்தியா யார் சொன்னாலும் கேட்காமல் தொடர்ந்து தன் போருக்கான ஆதரவை இலங்கை அரசுக்கு வழங்கி தமிழின சுத்திகரிப்பை இன்றைய தேதி வரை ஊக்கப்படுத்துகிறது. என் இனத்தின் அழிவில் காங்கிரஸ் அரசு எதைத்தான் சாதிக்க நினைக்கிறது?

  6. Senthil Kumar.M says:

    ஐயா ,

    தமிழ் நாட்டில் ஒரு சிலரே ஈழ பற்று இருக்கிறது.

    நம்ப ஊரில் “படித்த முட்டாள்கள்” அதிகம்.

    ஒரு வகையினர் என்ன தான் படித்து இருந்தாலும் தனது கட்சியை கட்டிய பிடிதிருகிரர்கள்.

    ஒரு வகையினர் என்ன தான் படித்து இருந்தாலும் “அரசியல் வேணாம் ப்ளீஸ்” என்று புத்திசாலியா ஒதுங்கி கொள்கிறார்கள்.

    மற்றொரு வகையான அதி புத்திசாலிகள் “நோ ஐடியா” என்று ஒதுங்கி கொள்கிறார்கள்.

    ( இந்த படித்த முட்டாள்கள் என்று தமிழன் என்ற உணர்வு வருகிறதோ அதுவரை ஒன்னும் செய்ய முடியாது ஐயா )

  7. Rathi says:

    ஐயா சு.ப.வீ.

    நான் ஓர் புலம் பெயர்ந்த ஈழத்தமிழ். இன்று என் இனத்தின் நிலை கண்டு அனேகமான ஈழத்தமிழர்களைப் போல் தாங்கொணா வேதனையில் இருப்பவள். நித்தமும் உங்கள் தளத்திற்கு வந்து பார்த்துவிட்டு செல்கிறேன். இன்றாவது நீங்கள் ஏதாவது பேசியிருப்பீர்க‌ள் என்ற நப்பாசை.

    யார் யாரோ பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி. அவரவர் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றாற்போல். ஆனால், நாங்கள் உங்களின் வார்த்தைகளை கேட்க ஆவலோடு உள்ளோம்.

Leave a reply to R Kanann Cancel reply