பாபநாசத்துப் பார்ப்பானும் – கலிங்கப்பட்டிச் சூத்திரனும்

– சுப. வீரபாண்டியன்

இங்கு சில மாதங்களாக, நம் மீது சேறும் கறியும் வாரிப் பூசப்படுகின்றது. கடந்த கால் நூற்றாண்டாக, ஈழ மக்களின் உணர்வுகளை உலகெங்கும் எடுத்துச் சென்ற, உரிமைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த, அடக்கு முறைகளையும், சிறைவாசத்தையும் ஏற்றுக் கொண்ட எம் போன்றோர் மீது, துரோகிப்பட்டம் இலவசமாய் ஏற்றப்படுகிறது.

ஈழ மக்களை அழிக்கும் சிங்கள அரசுக்கு, இந்தியா ஆயுதமும், உளவுத் தகவல்களும் அளிக்கின்றது. இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிரசுக்குத் தி.மு.க.வும், கலைஞரும் துணைபோகின்றனர். அந்தக் கலைஞருக்கு என் போன்றவர்கள் தேர்தலில் வாக்குக் கேட்கிறார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.

Vaiko எப்போதும் கலப்படமற்ற பொய் கரை சேராது. ஆனால், உண்மை போலத் தோற்றமளிக்கும் பொய்யும், உண்மை கலந்த பொய்யும் ஆபத்தானவை. மேலே உள்ள பொய், அது போன்றதுதான். எனவே, இன்றைய சூழலில், சில உண்மைகளை விளக்கிவிட வேண்டிய கடைமையும், கட்டாயமும் நமக்கு உள்ளது.

நானும், நான் சார்ந்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையும், கடந்த தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்தது முழுக்க முழுக்கச் சரியானது என்பதே இப்போதும் என் கருத்தாக உள்ளது. திரைப்பட இயக்குனர் அருமைத் தம்பி சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்டார். புதுவையில், அன்பு நண்பர் கவிஞர் அறிவுமதி மாம்பழத்திற்கு வாக்குக் கேட்டார். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை, ஒருநாளும் முடியாது.

Jeyalalitha தி.மு.க.விற்கு வாக்குக் கேட்டது, ஈழ மக்களுக்கு நன்மை செய்யவா, இனத்தையே அழிக்கவா என்பது குறித்து இதயம் உள்ளவர்கள் சிந்திக்கட்டும்.

போர் என்பது பன்முகத் தன்மையுடையது. களம்தான் அதன் முகாமையான முனை என்றாலும், அத்தோடு அது நின்று விடுவதில்லை. போராளிகளுக்குப் பின்புலமாக நிற்கும் மக்கள், நிதி உதவியையும், பிற உதவிகளையும் செய்யும் புலம் பெயர்ந்தோர் முதலானவர்களுக்கும் போரில் பெரும் பங்கு உண்டு. அது போலவே, போராளிக் குழுக்களுக்கும், அரசுகளுக்கும் இடையில் பாலமாக நின்று பணியாற்றுவதும் மிகத் தேவையான கடமைகளில் ஒன்று என்பதை இங்குள்ள நண்பர்கள் பலர் உணர்வதில்லை.

Ravishankar அரசுகளோடு மட்டுமின்றி, பல்வேறு கட்சிகளுக்குள்ளும் உட் புகுந்து, போராட்ட நியாயத்தை உணர்த்த வேண்டிய பணியும் ( Lobbying ), போராட்டத் தேவைகளில் ஒன்றே ஆகும்.

அந்த வகையில், ஈழவிடுதலை ஆதரவாளரான அண்ணன் வைகோ, புலிகளைத் தன் நேர் எதிரியாகக் கருதும் ஜெயலிலதாவிடம் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பாரேயானால், அது மிக மகிழ்ச்சிக்குரியதுதான்.

ஆனால் இங்கே என்ன நடந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். 2006 ஆம் ஆண்டுத் தேர்தலின் போதே வைகோ, அ.தி.மு.க. அணிக்குப் போய்விட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில், ஜெயலலிதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஈழம் என்று சொல்வதே தவறு என்றும், பிரபாகனைக் கைது செய்து இங்கு அழைத்து வந்து தூக்கில்போடவேண்டும் என்றும்தான், கடந்த ஜனவரி வரையிலும் கூடச் சொல்லிக் கொண்டிருந்தார்.

திடீரென்று, தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, அவருடைய பேச்சில் மாற்றம் தெரிந்தது. தனி ஈழமே தீர்வு என்றும், இராணுவத்தை அனுப்பித் தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்றும் பேசத் தொடங்கினார். இப்போதும், விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பு என்றே அவர் கூறுகிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ஈழத்தைப் பெற்று அவர் யாரிடம் தரப்போகிறார் என்று ஒரு கேள்வி இருக்கிறது. டக்ளஸிடமோ, கருணவிடமோ கொடுப்பார் போலிருக்கிறது. எப்படியிருப்பினும், ஈழத்திற்கு ஆதரவாக அவர் தேர்தல் கூட்டங்களில் பேசினார்.

இந்த மனமாற்றம் தனக்கு எப்படி ஏற்பட்டது என்பதையும் அவரே மேடைகளில் குறிப்பிட்டார். நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு செய்தி உள்ளது. மூன்றாண்டுகளாக தன்னுடன் இருக்கும் வைகோ உண்மைகளை எடுத்துக் காட்டியதால், மனம் மாறியதாக அவர் கூறவில்லை. எங்கிருந்தோ வந்த ‘ குருஜி ரவிசங்கர் ’ கொண்டுவந்த படங்களால் உண்மை புரிந்தது என்றுதான் சொன்னார்.

அந்தக் குருஜியோ, அடுத்தநாளே, ராஜபக்சே அரசாங்கம், தமிழ் அகதிகளை மிகப் பரிவோடு கவனிப்பதாக அறிக்கைவிட்டார். ஏனெனில் அந்தக் குருஜி இங்கே உள்ள ஜெயலலிதாவிற்கு மட்டுமின்றி, அங்கேயுள்ள ராஜபக்சேக்கும் மிகவும் வேண்டியவர்.

அவரை உயர்த்திப் பிடித்த ஜெயலலிதா, ஏன் வைகோவைக் குறிப்பிடவில்லை? கடந்த மூன்று ஆண்டுகளில், வைகோ ஜெயலலிதாவிடம் ஈழம் குறித்துப் பேசவில்லையா, அல்லது அவருடைய பேச்சை ஜெயலலிதா மதிக்கவில்லையா என்ற கேள்வி நம்முன் எழத்தானே செய்யும்.

பாபநாசத்துப் பார்ப்பனர் ரவிசங்கர், கலிங்கப்பட்டிச் சூத்திரர் வைகோ என்பதுதானே வேறுபாடு !

ஆனால், கலைஞர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

2006 திசம்பரில், இலங்கை அரசின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரை, நம் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் அழைத்துச் செல்கிற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு, இந்தியப் பிரதமரைச் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புவதாகச் சொல்லினர். அதற்கான ஏற்பாடுகளைக் கலைஞரே செய்து தந்தார். அவர்கள் ஐந்து பேரை மட்டும் அனுப்பியிருந்தாலே போதுமானது. தில்லியில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் மற்ற பணிகளை எல்லாம் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் கலைஞரோ, கவனமாக என் பெயரையும் சேர்த்து ஆறு பேரும் இந்தியத் தலைமை அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.

நான் தில்லிக்குப் போய்ப் புதிதாய் ஒன்றையும் சாதித்துவிடப் போவதில்லை. எனினும், எனக்கு ஓர் அங்கீகாரம் வழங்க வேண்டும் எனக் கருதியே முதல்வர் அவ்வாறு செய்தார். இங்குதான் கலைஞர், ஜெயலலிதா இருவரும் அடிப்படையில் வேறுபடுகின்றனர்.

இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், அண்ணன் வைகோ, ஜெயலலிதா தலைமையின் கீழான அணியில் நீடிப்பது அவருடைய விருப்பம். ஆனால், ஈழச்சிக்கலை முன்னெடுக்கும் போதெல்லாம், இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையினர், ராஜபக்சேயைக் காட்டிலும், கலைஞர் மீதுதான் கூடுதல் வசைபாடினர்.

ஈழத்தமிழர் ஆதரவு என்பது துணை நோக்கமாகவும், கலைஞர் எதிர்ப்பு என்பது முதல் நோக்கமாகவும் அவர்களுக்கு ஆகிவிட்டது. உண்மையாகவே, ஈழஆதரவே அவர்களின் முற்றும் முடிந்த முடிவென்றால், நண்பர் திருமாவளவனையும் சேர்த்துக் கொண்டு, ஈழ ஆதரவு அணியாகத் தேர்தல் களத்தில் திரண்டிருக்க வேண்டும்.

திருமாவளவன் பலமுறை அந்தக் கருத்தை எடுத்துச் சொல்லியும், எவரும் அதைக் கேட்கவில்லை. தேர்தல் வந்தவுடனே அவர்கள் போயஸ் தோட்டத்திற்குள் புகுந்து கொண்டனர்.

தேர்தல் இல்லாத காலங்களில், ஈழம் பற்றிப் பேசுவது என்னும் நிலையைத்தான் அவர்கள் மேற் கொண்டனர். அதனால்தான், மே 10 ஆம் தேதி, சோனியா காந்தி சென்னை வந்தபோது, கறுப்புக்கொடி ஆர்ப்பாட்ட த்தில் கலந்து கொள்ள வைகோ, மருத்துவர் ராமதாஸ், தா.பாண்டியன் யாருக்கும் நேரமில்லாமல் போய் விட்டது.

காங்கிரசை எதிர்க்கப் புறப்பட்டத் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களும், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கத் தொடங்கினர். அதனால்தான் அவர்கள் அனைவரையும் மக்கள் புறக்கணித்தனர்.

தமிழீழத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்ற விரக்தியில், தமிழகத்தையும் சேர்த்துத் தொலைக்கத் தமிழக மக்கள் தயாராகஇல்லை. கலைஞர் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களுக்குச் செய்துள்ள நன்மைகள், அடித்தட்டு மக்களிடம் ஆழமாகப் பதிந்திருப்பதைப் பல ஊர்களில் நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு, தேர்தல் பரப்புரைச் சுற்றுப் பயணங்களில் எங்களுக்குக் கிடைத்தது. இந்த உண்மைகளை ஏற்கும் துணிவின்றிப் பணநாயகம் வென்றுவிட்டது என்று கூறுவதும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது பழி போடுவதும் பரிதாபகரமான செயல்களே அன்றி வேறில்லை.

ஏதோ எதிர்க்கட்சியினர் பணத்தையே பார்க்காதவர்கள் மாதிரிப் பேசுவது, கேலிக்கூத்தாக அவர்களுக்கே தோன்றும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்றால் இவர்கள் வெற்றிபெற்ற 12 தொகுதிகளில் மட்டும், வாக்குச் சீட்டுகளும், வாக்குப் பெட்டிகளுமா இருந்தன?

இவர்களின் தவறான போக்கால், தமிழ் நாட்டு மக்களிடையே தமிழீழப் பேராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்ற தவறான கருத்தொன்று சிலரால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.

தமிழ்நாட்டில், தமிழீழ ஆதரவு என்பது தோற்கவில்லை ; ஒருநாளும் தோற்காது. அதனைக் காட்டி அரசியல் லாபம் பெற முயன்றவர்களும், ஈழத்தைச் சொல்லித் தேர்தலில்வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதியவர்களும்தான் தோற்றுப் போனார்கள்.

கருஞ்சட்டைத் தமிழர்,

ஜீன் 2009

Leave a comment